தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் மக்களுக்கு புரிந்தும் புரியாத குட்டிக் குட்டி கதைகள் சொல்லி
மக்களை மயக்குவதில் கில்லாடிகள்..
இதோ....
ஜெயலலிதா சொன்ன 'நம்மை நாமே' குட்டிக்கதை!
"அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக் கொடுக்கும். ஒரு சின்னப் பையன் தன் தந்தையிடம் சென்று "அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடு" என்றான்.
உடனே தந்தை தனது மகனைப் பார்த்து "மகனே அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனயன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடம் இல்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயே தான் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன் "தந்தையே உங்களைப் பார்த்தே நான் அரசியலில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றான்.
வேறு வழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுக்க சம்மதித்தார். மகனை அழைத்து "ஓடிப்போய் ஒரு ஏணி எடுத்துக் கொண்டு வா" என்றார். "எதற்கு ஏணி?" என்று கேட்டான் மகன். "இப்படியெல்லாம் கேட்கக் கூடாது நான் சொல்வதைச் செய்ய வேண்டும்" என்றார் தந்தை. மகன் ஏணியை எடுத்துக் கொண்டு வந்தான்.
"இந்த சுவற்றிலே ஏணியை சாத்தி வை. பிறகு ஏணியின் மீது ஏறி உச்சிக்கு செல். மேலே பரணியில் நான் என்னென்ன ஏமாற்று வேலைகளைச் செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்பது பற்றி நெஞ்சைத் திறந்து எழுதி வைத்துள்ளேன். அரசியல் பற்றிய அனைத்து பாடங்களும் அவற்றில் உள்ளன. அதை கற்றுத் தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாக ஆகலாம்" என்றார்.
"அப்பா நான் ஏணியிலே ஏறி மேலே போகிறேன். நீ கீழே இருந்து ஏணியை கெட்டியாக பிடித்துக் கொள்" என்றான் மகன். "அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார் தந்தையார். மகன் மெதுவாக ஏணியின் மேலே போனான். அவன் உச்சிக்குப் போனதும் தந்தை ஏணியின் மேல் இருந்த கையை எடுத்து விட்டார். ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்து விட்டான். வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன்.
"என்னப்பா இப்படி ஏணியிலிருந்து கையை எடுத்துட்டியே! உன்னால் தான் எனக்கு இடுப்பில் இப்போது அடிபட்டு இருக்கிறது" என்று கூச்சலிட்டான். தந்தை சிரித்துக் கொண்டே "எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்?" என்று கேட்டார். இது தான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்து கொண்ட மகன், "அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது! நம்மை நாமே தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று முடிவெடுத்தான்.
சரி. எவ்வளவு தூரம் தான் இவன் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம் என நினைத்த தந்தை சிறிது விட்டுப் பிடித்து பின்னர் மகனுக்கு கடிவாளம் போட்டுவிட்டார். அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்காகத் தான் நான் இந்தக் கதையை இங்கு கூறினேனே தவிர, நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என்றார் ஜெயலலிதா
இதற்கு பதிலடியாக....
கருணாநிதி சொன்ன "பேராசை பெருமாட்டி" குட்டிக் கதை.....
"சென்னையில் 14 திருமணங்களை நடத்தி வைத்த அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல 'குட்டிக் கதை'களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்!
-ஜெயலலிதா தனது பேச்சில் ஒரு அப்பா மகன் கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை அவர் சற்று மாற்றிக் கூறியிருக்க வேண்டும். ஒரு தந்தை தன் மகனை ஏணியில் மேலே வரச் சொல்லி, அவன் உயரே வரும்போது, ஏணியைத் தட்டி விட்டு மகனை அடிபட வைத்தார் என்று கூறியிருக்கிறார்.
எந்தப் பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்ப மாட்டார். அது குடும்பம் நடத்தும், பிள்ளை பெற்றவர்களுக்குத் தான் தெரியும்!
ஊரிலே உள்ள பிள்ளைகளுக்கெல்லாம் முறையாக அரசியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்த தந்தை, தன் மகனுக்கு மட்டும் அரசியலை முறையாகக் கற்றுக்கொடுக்காமலா இருந்து விடுவார்? அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து, படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். எப்படியோ அடித்த காற்றில் மேலே வந்து கோபுரக் கலசத்தில் ஒட்டிக் கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச் சொல்லத் தான் தெரியும்.
-உண்மையில் கதை என்ன தெரியுமா? தந்தையும், மகனும் அன்போடும், பாசத்தோடும் இருப்பதையும், அரசியலை முறையாக நடத்துவதையும் கவனித்து வந்த, எதிர் வீட்டுப் பெருமாட்டிக்கு பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை. அந்த அம்மையாருக்குப் பிள்ளையும் கிடையாது, குட்டியும் கிடையாது. ஆனால் குடும்பமே எனக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டே ஊரிலே உள்ள சொத்துக்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளப் படாத பாடு படுவார். மலைப் பிரதேசங்களில் எல்லாம் தேயிலை
எஸ்டேட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு "நாடு ஆறு மாதம், காடு ஆறு மாதம்" என்பதைப் போல மாளிகையிலும் அரண்மனையிலும் ஓய்வெடுத்துக் கொண்டு காலம் தள்ளி வருபவருக்கு எதிர் வீட்டில் தந்தையும், மகனும் பாசத்தோடு இருப்பது பிடிக்குமா? அல்லது பொறுக்குமா? எப்போது தந்தை மகன் ஆகியோருக்குள் தகராறு வரும், நாம் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து மகிழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்
எனவே மகனுக்கும், தந்தைக்கும் இடையே பிளவு வரும், நாம் ரத்தம் குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர்வீட்டு சீமாட்டி ஆப்பசைத்த குரங்கைப் போல் ஏமாறப் போவது நிச்சயம். கதையில் வரும் பேராசைப் பெருமாட்டியைப் பற்றித் தான் நான் இங்கே விளக்கினேன். அது யாரோ என்று எண்ணிக் கொண்டு, நீங்கள் யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை!"
இப்படி இரெண்டு பேரும் மாறி மாறி கதை சொல்லியே.....
.
.
.
என்ன தூங்க விடுல
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |