google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நானும் ஒரு வேலையில்லா பட்டதாரி....

Wednesday, July 16, 2014

நானும் ஒரு வேலையில்லா பட்டதாரி....

 இன்று வேலையில்லா பட்டதாரி என்று ஒரு சினிமா வருவதை நினைக்கும் போது என் அனுபவச் சிந்தனையும் வந்து போகிறது

ஒரு சிறு மளிகை வியாபாரி மகனான நான் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து சரியான வழிகாட்டல் இன்றி கல்லூரியில் சேரும்போது அப்போது (1977) நல்ல மவுசாக இருந்த  BBA,BSc,BCom,...போன்ற படிப்புகள் படிக்க ரூ.5,000/- நன்கொடை கொடுக்க தயங்கிய என் தந்தை.........

படிப்பதற்கு  எல்லாம் காசு கொடுப்பாங்களா...? என்ற கேள்வியுடன் யாரும் தேடுவாரின்றி கிடந்த B.A (ENGLISH)...படிப்பில் மதுரை SVN கல்லூரியில் சேர்த்துவிட்டார்

பள்ளியில் படிக்கும் போதே ஆங்கிலம் எனக்கு தரிகிடத்தோம் கல்லூரியில் ஆங்கிலமே எனக்கு பாடமாக அமைந்தது என் சோதனைமேல் சோதனை வேதனை.....

நான் மட்டுமல்ல அங்கே என் வகுப்பில் படித்த அனைவரும் இப்படித்தான் என்பதை.......முதலாமாண்டு 21 பேர் இருந்த வகுப்பு இரண்டாம் ஆண்டு 13 பேர் ஆனது மூன்றாம் ஆண்டு 7 பேர் மட்டுமே கடைசியில் பாஸ் ஆனது என்னைச் சேர்த்து 3 பேர் மட்டுமே.........

சரி ...முதுகலை படிப்பாவது சென்னையில் பெரிய கல்லூரியில் படிக்கலாம் என்று நினைத்தப் போது பிரசிடென்சி கல்லூரி,லயோலா கல்லூரி...என்று அலைந்ததுதான் மிச்சம் 

கடைசியில் காலம்தாழ்ந்து கடும் அலைச்சலில் M.A (ENGLISH) படிக்க தூத்துக்குடி V.O.C கல்லூரியில் இடம் கிடைத்தது 

அங்கே  படிப்பு முடியும்போது பேராசிரியர்கள் அறிவுரைப்படி அடிசினல் தகுதி இருந்தால்தான் வேலை கிடிக்கும் என்றதால் வ.உ.சி.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் B.Ed படிப்பும் முடித்து வெளியே வந்தால்...

எங்கள் ஊரிலேயே முதல் முதுகலை பட்டதாரி படித்தவன் என்ற எனக்கு மட்டுமே பெருமையை தவிர.... எதுவுமில்லை  
நானும் ரொம்ப அவமானத்தாலும் தந்தையின் வேலை பார்க்க வேண்டும் என்ற கெடுபிடியாலும் சும்மாங்காட்டியும் சென்னையில் வேலை கிடைத்துவிட்டது என்று பொய் சொல்லி 1983-ல் ஊரைவிட்டு சென்னைக்கு  ஓடிவந்தேன்

சென்னையில் ஒரு ஷேர்-ரூம்பில் தங்கியிருந்து இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் வேலைக்கும் வேறு வேலைகளுக்கும்  அலைந்தேன் நம்ம தூத்துக்குடி இங்கிலிஷ் சென்னையில் எடுபடவில்லை அப்போது பயங்கர வேலையில்லா திண்டாட்டம்

அப்புறம் எப்படியோ அறிவு வந்து எனது M.A படிப்பை மறைத்து SSLC படித்ததாக அதற்குரிய தகுதியில் உள்ள வேலைக்கு நாளிதழ் விளம்பரம் பார்த்து ஒரு நிறுவனத்தில் சேல்ஸ்-மேன் கம் கேன்வாசர் வேலைக்கு சேர்ந்து வீடுவீடாக விற்பனை பிரதிநிதியாக அலைந்து.........

அதே  நிறுவனம் எனது திறமையையும் படிப்பையும்  தெரிந்து கொண்டு ஒரு வருடத்தில் அதன் புதிய கிளைக்கு மேலாளராக நியமித்தது

 அந்த வேலை என் தந்தைக்கு பிடிக்கவில்லை "இதற்காகவா உன்னை படிக்க வைத்தேன்..? கடையில் வேலை செய்வதால் உனக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்" என்று கவலையோடு போனவர் இறந்துபோனார்

ஆனாலும் யார் ஆதரவும் இல்லாமல்சென்னையில் இருந்த எனக்கு எனது நிறுவனத்தில் நல்ல மதிப்பும் அன்றே HERO HONDA வாகனவசதியும் செய்து கொடுத்தது (அப்போது நான் தங்கியிருந்த தெருவிலேயே என்னிடம் மட்டுமே பைக் இருந்தது) 

என்னைப் பற்றி கேள்விப்பட்ட எல்லா அரசியல் கட்சிகள் செல்வாக்கு உள்ள  ஒரு செல்வந்தர்  எனக்கு அவரது மகளை அன்றைய முதலமைச்சர் தலைமையில் திருமணமும் செய்துவைத்தார் 

(ஆனாலும் நான் இன்றுவரை எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் வேலை  மட்டுமே கர்மமாக வாழ்கிறேன்) 
எனது நிறுவனம் மூலம் லண்டன்-பாரீஸ் பயணம்  செல்லும் வாய்ப்பும் கிடைத்தது 

என்னை தூற்றிய ஊரும் எனது இந்த உயர்வுக்கு காரணம் எனது படிப்பு என்பதை உணர்ந்து இன்று எங்கள் கிராமத்தில் ஆண்-பெண் பட்டதாரிகள், இன்ஜினியர்கள்...என்று நிறைந்துள்ளது எனக்கும் ஊருக்கு சென்றால் பொறாமை கலந்த  மரியாதை...?

நானும் எனது மகனை நன்றாக படிக்கவைத்தேன் அவன் கேட்டபடியே B.E.(AERO) பல லட்சங்கள் நன்கொடையும் செலவும் செய்து படிக்க வைத்தேன் அவனும் படித்து முடித்து இன்று நம் நாட்டில் இருக்கும் பல லட்சம் வேலையில்லா பட்டதாரிகள் வரிசையில்........

ஆனாலும் எனது தந்தையார் போல் நான் அவனுக்கு வேலை பார்க்க வேண்டி தொல்லை செய்யவில்லை மேலும் அவனது தகுதியை வளர்த்துக்கொள்ள M.B.A. படிக்க ஏற்பாடு செய்கிறேன் 
இந்த எண்ணத்தில்தான்.................

இன்று பொருளாதார வசதியும் எனக்கு கீழ் நூறு பேருக்கு மேல் வைத்து வேலை செய்யும் மதிப்பும் உள்ளவனாக இருக்கும்  நானும் அன்று ஒரு வேலையில்லா பட்டதாரி.......


ஆனால்  இன்றுவரை எனக்கு புரியாத புதிர்..........
எந்த  ஊரும் உறவும் என்னை ஏளனமாகப் பேசியதோ அவர்களே வியக்கும் வண்ணம் மாறியது என் அதிர்ஷ்டமா? 
அல்லது என் படிப்பா? அல்லது (இன்றும் நான் 365 நாட்களில்  9 TO 9 வேலையில் வாரத்தில் ஒருநாள் 3 மணி நேரம் மட்டுமே ஒய்வு எடுக்கிறேன்) என் கடும் உழைப்பா?

(குறிப்பு-இன்று மட்டுமல்ல என்றும் உண்டு இந்த வேலையில்லா பட்டதாரிகள் நிலைமை என்பதை என் இளைய சமுதாயம் தெரிந்துகொள்ளவே.........)





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1