google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: எங்க ஊர் ராஜாக்களும் ராணிகளும்

Tuesday, November 11, 2014

எங்க ஊர் ராஜாக்களும் ராணிகளும்

இன்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் பென்சன் நலத்திட்ட உதவிகளை நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட முதியோர் ஒருவர் வரிசையில் நின்று மயங்கி விழுந்து மரணித்த செய்தியைப் படித்தபோது........
இந்த நினைவுச் சிதறல் மின்னலாய் மனதில் தோன்றியது

எனது சிறிய கிராமத்தில் எனக்கு அறியும் வயது ஆரம்பிக்கும் போது சில முதியோர்களை பார்த்திருக்கிறேன் அவர்களில்.........
1-கூனிக்கிழவி 
2-புளிக்குத்தியார் 
3-சாமிப்பாட்டி 
4-முருங்கப்பாட்டி 
5-உப்பு தாத்தா 
இவர்களை என்னால் மறக்கமுடியவில்லை 

இவர்கள் வயது அப்போது யாருக்கும் தெரியாது அவர்கள் அனைவரும் அன்றே நூறு வயது தாண்டியவர்களாக அல்லது நெருங்கியவர்களாக   இருக்கவேண்டும் இவர்களுக்கு என்று யாரும் வாரிசு கிடையாது இவர்கள் யாரும் யார் உதவியையும் எதிர்பார்த்து வாழ்ந்ததில்லை 

1-கூனிக்கிழவி
எனது ஊர் எல்லை ஆரம்பிக்கும் முதல் வீடு இந்த பாட்டிக்கு சொந்தம் சிதிலமடைந்த மண் சுவற்றில் பயிந்த பழைய பனை ஓலையால்  வேயப்பட்ட கூரை வீட்டைச் சுற்றி முள் மரங்கள்  வேலியாக இருக்க முதுகில் கூன் விழுந்த இந்தப் பாட்டியை சிறுவர்கள் நாங்கள் கூனிப் பாட்டி என்று கூவி அழைத்து விளையாடுவோம் ஆனால் அருகில் செல்லமாட்டோம் 
அருகில் சென்றால் பாட்டி கையிலிருக்கும் கொம்பால் அடி விழும் 

இந்தப் பாட்டியின் வாழ்வாதாரம் எங்கள் ஊரில் உள்ள கோயிலில் தினந்தோறும் இரவு பூஜை முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் பூஜாரி கொடுக்கும் பொங்கல் பிரசாதம் மட்டுமே யாரிடமும் பழகாத பேசாத இந்தப் பாட்டி யாரிடமும்  யாசிப்பதில்லை

2-புளிக்குத்தியார்  
முதலில் எங்கள் வீடு அருகில் இருந்த இந்த முதியவரை  பார்த்து இவரா புலியை குத்தினார்...? என்று அம்மாவிடம் கேட்டு ஆச்சரியப்படுவேன் பிறகுதான் தெரிந்துகொண்டேன் அவர் புளியம்பழத்தின் கொட்டைகளை குத்தியெடுத்து வியாபாரம் செய்பவர் என்று 

முதுகில் கூன் விழுந்த அவர் தலையில் ஒரு பனை மட்டையில் செய்த பெட்டி (நார் பெட்டி) நிறைய உதிர்ந்த புளியம்பழங்களை அவரது காட்டுக்குளிருந்து பொறுக்கி சுமந்து வீட்டிற்கு கொண்டுவந்து காயவைத்து அதன் ஓடுகளை பிரித்து அதன் கொட்டைகளை குத்தூசியால் குத்தியெடுத்து சிறுக சிறுகச் சேர்த்து எங்கள் ஊர் கடைகளில் கொடுத்து அரிசி வாங்கி கஞ்சி குடித்து வாழ்ந்தவர் யார் தயவையையும் உறவையும் எதிர்பார்த்தவரில்லை 

3-சாமிப்பாட்டி 
இந்தப் பாட்டியும் எங்கள் வீட்டு அருகில்  குடிசை வீட்டுக்குள்ளயே பெண்கள் மட்டுமே சென்று வழிபடும் ஒரு அம்மன் கோயில் வைத்து வாழ்ந்தார் எல்லோரும் சாமிப்பாட்டி என்று மரியாதையுடன் பயபக்தியாக அழைப்பார்கள் நடமாட்டம் இல்லாத இப்பாட்டி குறி சொல்வதோ தட்சணை வாங்குவதோ இல்லை வெறும் சோறு மட்டுமே சாப்பிடும் இந்தப் பாட்டிக்கு யாராவது பெண்கள் வீட்டில் கொண்டு கொடுப்பார்கள் 

4-முருங்கப்பாட்டி
இந்தப் பாட்டிக்கு வயது அதிகம் இருந்தாலும் உடம்பில் தெம்பும் உள்ளத்தில் ஊக்கமும் அதிகம் உண்டு யாரும் வாரிசு இல்லாத இந்தப் பாட்டிவீட்டு முற்றத்தில் இரண்டு பெரிய முருங்கை மரங்கள் இருக்கும் அதில் காய்க்கும் காய்களை வியாபாரிகள் மூட்டை மூட்டையாக பறித்துச் செல்வார்கள் அந்த வருமானம் மட்டுமின்றி.........

பாட்டி காலையிலிருந்து மாலைவரை மந்தைகளில் மாட்டுச் சாணம் பொறுக்கி வந்து அந்த முருங்கை மரங்கள் அடிவாரத்தில் குவிக்கும் நிறைய சேர்ந்ததும் சாண உரத்தை மொத்தமாக விற்பனை செய்யும் இந்தப் பாட்டியை கண்டால் எல்லோரும் அலறி அடித்து ஓடுவார்கள் வாயாடிப் பாட்டி ஆனால் யார் வாழ்வையும் அடித்து பறிக்க பார்த்ததில்லை 

5-உப்பு தாத்தா  
இந்த முதியவருக்கு எந்த ஊர் என்று தெரியாது ஆனால் வாரம் ஒருநாள் எங்க ஊருக்கு வருவார் தலயில் இருக்கும் பெட்டியில் உப்பு இருக்கும் நாழி வைத்து அளந்து போட்டு உப்பு வியாபாரம் செய்வார்  இவரிடம்தான் எல்லோரும் உப்பு வாங்குவார்கள் வயது ரொம்ப அதிகம் உடம்பெல்லாம் கட்டி கட்டியாக அருவருப்பாக ஐ பட போஸ்டரில் விக்ரம் தோன்றுவது போல் சதைகள் தொங்கும் ஆனாலும் என் அம்மா முதற்கொண்டு எங்க ஊர் அம்மாக்கள் அனைவரும் இவரிடம்தான் உப்பு வாங்குவார்கள் இன்னும் சிலர் இவருக்கு கருப்புக்கட்டி கூப்பனியும் தண்ணீரும் கொடுத்து உபசரிப்பார்கள்  அடடா... அன்று எங்க ஊர் அம்மாக்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் நினைக்கும் போதே மனது வேர்க்கிறது

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்று வாழ்ந்த  இவர்கள் அனைவரும் எங்க ஊர் ராஜாக்கள் ராணிகள்  இன்னும் என் இதயத்தில் வாழும் மனிதர்கள் 

ஆனால் இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது இன்றைய  முதியோர்களில் வசதி இருப்போருக்கு மட்டுமே முதியோர் இல்லங்கள் மற்றவர்களுக்கு சாலை ஓரங்கள் கடவுள் வாழும் கோயில்கள்கூட இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில்லை 

அரசாங்கம் கொடுக்கும் முதியோர் உதவித்தொகையிலும் ஊழல் சரியான பார்வையின்றி உண்மையான முதியோர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் 

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடும் அளவுக்கு வளர்ச்சியடைந்த மனிதர்களால் முதியோர்களான சக மனித தெய்வங்களை காக்கமுடியவில்லை 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1